எனக்கு நேர்ந்த வளர்சிதை மாற்றங்கள்!

ஜூன் 14, 2006

என்னுடைய டீனேஜை நான் கடந்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன என்று கொஞ்சம் திரும்பிப் பார்க்க நினைக்கிறேன்… என் ஞாபகங்களில் இருக்கும் சில விஷயங்கள் :

1) 19 வயது முடியும் போது கூட எனக்கு சரியாக மீசை வளரவில்லை…. கொஞ்சம் ஒல்லியான தேகம் வேறு என்னை 10th படிக்கும் பையன் போல காட்டியது…. அப்பா பயன்படுத்தும் கோத்ரேஜின் Die Stick ஒன்றை உபயோகித்து எனக்கு திக்கான மீசை இருப்பதுபோல ஒரு இமேஜ் கிரியேட் செய்தேன்….

2) எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உடனே காதல் வந்து தொலைத்தது…. பெண் கருப்போ சிவப்போ, அழகோ அசிங்கமோ, கிழவியோ குமரியோ, எங்கே இருந்து தான் வந்து தொலைக்குமோ அந்த காதல்….

3) சும்மா ஸ்டைலுக்காக தம் அடிக்கும் பழக்கமும் அப்போது இருந்தது…. ஒரு பெண்ணிடம் பந்தாவாக தம், தண்ணி பழக்கம் இல்லை என்று கூறியபோது என்னடா ஆம்பளை நீ என்று கேட்டிருந்தாள்…..

4) வாழ்க்கையைப் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியிருந்தது… எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிந்தித்தே கொஞ்சம் முடி கொட்டியது….

5) முடி கொட்டியது என்றதுமே இந்த நினைவு வருகிறது…. ஷாம்பூ போட்டு தலைகுளிக்கும் போதெல்லாம் தலையைத் தேய்த்து முடித்தவுடன் ஒரு இருபது முடியாவது கையோடு வரும்…. என் அப்பாவுக்கு கொஞ்சம் வழுக்கை என்பதால் எனக்கும் வழுக்கை வந்து தொலைக்குமோ என்ற பயத்தால் கண்ட கண்ட மூலிகை எண்ணெய்களை உபயோகித்தேன்…..

6) ஹீரோவுக்காகவும், காதல் மற்றும் சண்டை காட்சிகளுக்காகவும் படம் பார்க்கும் வழக்கம் போய் ஹீரோயின் யார் என்று பார்த்து படம் பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது…. பலான படங்களுக்கும் நண்பர்களோடு ஆர்வத்துடன்(!) போய் படம் பார்த்து போஸ்டரில் இருக்கும் பிட்டுகள் கூட ஒரிஜினல் படத்தில் இல்லாமல் ஏமாந்தது நினைவுக்கு வருகிறது….

7) பெண்களுடன் பேசும் போது அவர்களது மேனரிசத்தை ரசிக்கத் தொடங்கியது அப்போதிருந்து தான்…

8) என் குரல் வேறு கொஞ்சம் இனிமையாக இருக்குமா, அதனால் போனில் பேசும்போது எதிர்தரப்பில் இருக்கும் ஒருவர் மேடம் என்று சொல்லி விட்டார்…. இதற்காக டாக்டரைப் பார்த்து என் குரலில் ஏதாவது பிரச்சினையா என்று ஆலோசனை செய்தேன்….

9) செக்ஸ் என்றாலே என்னவென்று (சரியாகத்) தெரியாததால் எந்த செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆர்ட்டிக்கிள் பத்திரிகைகளில் வந்தாலும் ஆர்வத்தோடு ஒளித்து வைத்து படிப்பேன்… குறிப்பாக தினத்தந்தியில் டாக்டர் ஆஷாவின் பதில்கள், தினமலர் வாரமலரில் அனுராதா ரமணின் அட்வைஸ்கள் (மேக்ஸிமம் செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தான்), டாக்டர் நாராயண ரெட்டியின் நக்கீரன் தொடர்கள்…..

10) உடை அணிவதற்காக ரொம்ப நேரம் மெனக்கெடுவேன்…. உடை அலங்காரம் முடித்தபிறகு திருப்தி இல்லையென்றால் வேறு சட்டையை எடுத்து மெனக்கெட்டு அயர்ன் செய்து மீண்டும் அணிவேன்…. இதனால் ஏற்படும் நேர விரயம் ஒரு பொருட்டே அல்ல….

11) முடிந்தவரை மூஞ்சியை சிரித்த மூஞ்சியாக (பிகர்களுக்காக) வைத்துக் கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன்…. இருந்தாலும் இயல்பிலேயே வாய்த்த சிடுமூஞ்சி இந்த முயற்சியை முறியடித்தது….

12) நான் கொஞ்சம் கலராக இருந்தாலும் கூட மாநிறமோ என்று மனதுக்குள் ஒரு ஐயம்…. இதனால் தினமும் மூன்று வேளை Fair & Lovely பயன்படுத்துவேன்….

13) தாடி, மீசை சரியாக இல்லையென்றாலும் கூட ஷேவிங் மட்டும் 2 நாளைக்கு ஒரு முறை கட்டாயமாக செய்வேன்…

14) ஹேர்-ஸ்டைலில் ரொம்பவும் ஆர்வம் இருந்தது…. ஹேர்-கட் திருப்தியாக அமைந்தால் சலூன்காரருக்கு எக்ஸ்ட்ராவாக 5 ரூபாய் டிப்சும் உண்டு…..

15) ரொம்பவும் ஒல்லியான தேகம் இருந்ததால் ஜிம்முக்கு போகும் வழக்கம் இருந்தது… அங்கே பீமன்கள் போல இருந்தவர்கள் நக்கலடிப்பார்கள்….

என் ஞாபகத்தில் இருக்கும் இவையெல்லாம் எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள்… அல்லது நானாக மாற்றியவை….


கொலைநகரம்

ஜூன் 10, 2006

தலைநகரம் படம் சமீபத்தில் பார்த்தேன்… ஏன் இந்த தலைப்போ தெரியவில்லை… பேசாமல் கொலைநகரம் என்று டைட்டில் வைத்திருக்கலாம்….

தமிழ் சினிமாவைப் பிடித்த சாபக்கேட்டின் படி இதுவும் தாதா கதை தான்… ரைட்டு என்ற பெயரில் ஒரு தாதா… திருந்தி வாழ நினைக்கும் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள்… முடிவு என்று ரொம்பவும் Typical ஆன Subject….

ரைட்டாக இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்… முகத்தில் சுத்தமாக Expression எதுவுமே காட்டாமல் தாதாவாக நடித்திருக்கிறார்… அவருக்கு நண்பனாக வரும் மெட்டி ஒலி போஸ் நன்றாக நடித்திருக்கிறார்…. ஆக்சன் காட்சிகளில் மட்டும் பட்டையைக் கிளப்புகிறார் சுந்தர் சி…. மார்கழி மாத பஜனைக் கூட்டத்தோடு வந்து இன்னொரு தாதாவின் வயிற்றில் ஒரு கோடு போட்டு விட்டுப் போகிறாரே…. செம அதிர்ச்சி தரும் காட்சி….

பிரகாஷ் ராஜ் ஏன் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஒத்துக் கொள்கிறாரோ தெரியவில்லை…. அவருக்கு தீம் மியூசிக் எல்லாம் கொடுக்கும்போது ஏதோ கலக்கப் போகிறார் என்று நினைத்து ஏமாற்றம் தான் அடைகிறோம்…

வடிவேலு வழக்கம்போல வெடிவேலு…. நாய்சேகராக இவரும் ஒரு குட்டித் தாதா (தாதா படங்களில் காமெடியனும் தாதா தானா?) இருந்தாலும் வின்னர், கிரி, லண்டன் என்று சுந்தர் சி இயக்கிய படங்களில் எல்லாம் கலக்கிய அளவுக்கு இந்தப் படத்தில் இல்லை…. பிகரை உஷார் செய்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு வரும் வடிவேலு மயில்சாமியிடம் கேட்கிறார்…. நான் எப்படி இருக்கென்?… அதற்கு மயில்சாமியின் பதில் “அண்ணே… சும்மா கும்முன்னு பிராத்தல் மாதிரி இருக்கீங்கண்ணே” :-)

படத்தில் பாய் ஆக வரும் கிழவர் சூப்பராக நடித்திருக்கிறார்… அவரது குரல்(!) அவருக்கு பிளஸ் பாயிண்ட்…. டெல்லி கணேசும் வழக்கம்போல அவரது கேரக்டரை (அரசியல்வாதி) மெருகேற்றி இருக்கிறார்…..

இசை சுமார் தான்… ஏதோ நினைக்கிறேன் பாட்டு மட்டும் ஓகே…. அந்தப் பாடலுக்கு இயக்குனர் அமைத்திருக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்…. இருந்தாலும் பாடலில் ஹீரோயின் சுறுசுறுப்பாக இருக்க ஹீரோவோ தேமேவென்று அசமஞ்சமாக இருப்பது கடுப்பு…..

கத்தி எடுத்தவன் நல்லவனாக இருந்தாலும் கத்தியால் தான் சாவான் என்று மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்…. 13 ரீலில் வெட்டு, குத்து என்று வன்முறையை நியாயப்படுத்தி விட்டு 14வது ரீலில் மெசேஜ் சொல்லுவது எவ்வளவு அபத்தம் என்று நம் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு என்றுதான் புரிந்து தொலைக்குமோ தெரியவில்லை…..

ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியிலாக படம் சுமார் தான் என்றாலும் தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கும் தாதா Fever, தலைநகரத்தை கரையேற்றுகிறது…..


காமிக்ஸ் ரசிகர்களுக்கு!

ஜூன் 8, 2006

தமிழில் காமிக்ஸ் என்பது 1960களில் வெளிவர ஆரம்பித்தது… எனக்குத் தெரிந்து “மாலை மதி” முதலில் காமிக்சாக 1960களின் மத்தியில் வந்தது…. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்….

ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் ஆரம்பமானது முத்து காமிக்ஸ் தோன்றிய பிறகே…. 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் கதை இரும்புக்கை மாயாவி…. 128 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை அப்போதே 90 காசு…. முல்லை தங்கராசன் என்பவரை பொறுப்பாசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் ராஜநடை போடத் தொடங்கியது….

பெரும் வரவேற்பின் காரணமாக முத்து காமிக்ஸ் 80களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் (தினமலர் வாரமலருக்கே அது தான் முன்னோடி) என்ற ஒரு இதழைத் தொடங்கியது…. ஆனாலும் மாத இதழுக்கு கிடைத்த வரவேற்பு வார இதழுக்கு கிடைக்காததால் அது கொஞ்சம் ஆண்டுகளிலேயே நிறுத்தப் பட்டு விட்டது….

முத்து காமிக்ஸின் அபார வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தார் 1984ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் இதழையும் தொடங்கினார்கள்…. முத்து காமிக்ஸின் உரிமையாளர் தன் மகனுக்காக தொடங்கிய காமிக்ஸ் அது…. அவரது மகன் விஜயன் லயன் காமிக்ஸின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அவரது வயது 17.

இதே ஆண்டில் பிரபல தினத்தந்தி குழுமமும் காமிக்சுகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தானும் ராணி காமிக்ஸ் தொடங்கியது…. 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு காமிக்ஸ் விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது…. குறிப்பாக Cowboy கதைகளை தமிழக குழந்தைகளும், இளைஞர்களும் பரவலாக ரசிக்க ஆரம்பித்தார்கள்….

லயன் காமிக்சும் தன் சாம்ராஜ்யத்தை ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என்று புதுப் புது காமிக்ஸ்களைத் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது….

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்த நானும் காமிக்ஸுகளுக்கு அடிமை ஆனேன்… அதுவும் லயன் காமிக்ஸ் தீபாவளி, கோடை விடுமுறை, பொங்கல் ஆகிய சமயங்களில் Digest போன்று ஸ்பெஷல் இதழ் வெளியிடுவார்கள்… அவற்றைப் படிக்க பெரும் ஆர்வம் காட்டுவேன்… 1987ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளியிட்ட சூப்பர் ஸ்பெஷல் 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது…. சமீபத்தில் அந்த இதழ் ஒன்றினை ரூ. 500 பிரீமியம் செலுத்தி வாங்கினேன்….

என் காலக்கட்டத்தில் காமிக்ஸ் படித்த சிலர் இன்னமும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் (நானும் தான்) …. நிறைய பேர் படித்த காமிக்ஸ்களை கலெக்டு செய்தும் வைத்திருக்கிறார்கள்…. நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்….

1993-94களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் மோகம் குறைய ஆரம்பித்தது…. ராணி காமிக்ஸ் தாக்குப் பிடிக்க முடியாமல் 500 இதழ்களோடு தன் கணக்கை முடித்துக் கொண்டது…. மினி லயன், ஜூனியர் லயன், திகில் இதழ்களும் ஊத்தி மூடிக்கொண்டன….

இப்போதும் மிஞ்சி நிற்பது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் மட்டுமே…. இந்த கோடை விடுமுறைக்கு லயன் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இதழின் விலை என்ன தெரியுமா? ரூபாய். 100/-…. என்னைப் போன்ற ஒரு சிலர் அதையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்….

யாராவது Ex-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்…. மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்… காமிக்ஸ் படிப்பதால் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நம் வயது 20 வருடம் குறைந்தது போல உணருகிறோம்….

அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கால இயந்திரந்தின் பயனை காமிக்ஸ் படிப்பது மூலம் நாம் அடையலாம்…..


புதுப்பேட்டை

ஜூன் 6, 2006

சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்… இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி…. இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்… இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது… மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்… சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்….

பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது… தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்…. அரசியல்வாதிகள் அல்ல…. ஓரிரு தாதாக்கள் மட்டுமே அரசியல் சார்பு நிலை எடுத்திருப்பதை பழைய தாதாக்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்….

உயிர் காக்க போராடும்போது ஒருவனின் வலிமை பன்மடங்காகிறது என்பது படம் சொல்லும் பாடம்…. கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவன் எப்படி நிதி அமைச்சர் (?) ரேஞ்சில் உயருகிறான்… அதற்காக அவன் என்னவெல்லாம் தரங்கெட்ட வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று காட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர்….

கதாநாயகன் நல்லவன் அல்ல…. கதாநாயகி ஒழுக்கமானவள் அல்ல…. படத்தில் எந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல குணமே கிடையாது… எல்லோருமே அயோக்கியர்கள், எல்லோருமே சுயநலவாதிகள்… இப்படியாக தமிழ் சினிமாவின் பல இலக்கணங்களை உடைத்திருக்கும் இயக்குநரின் தைரியத்துக்கு சபாஷ் போடலாம்….

எங்க ஏரியா உள்ளே வராதே என்ற பாடலுடன் அறிமுகமாகும் தனுஷ் (அந்தப் பாடலில் சிம்புவை ஏகத்துக்கும் போட்டுத் தாளிக்கிறார்) படத்துக்காக மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்…. இடைவேளை வரை அவரது பாத்திரத்துக்கு ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் அவரது உடலே இடைவேளைக்குப் பிறகு மைனஸ் பாயிண்டாக அமைகிறது….

பெற்ற அப்பாவையே நயவஞ்சகாக போட்டுத் தள்ளுவது… தன்னை உருவாக்கிய தலையின் தலையையே எடுத்து விடுவது… திருமணமாகப் போகும் நண்பணின் தங்கைக்கு விடாப்பிடியாக தாலி கட்டி அவள் வாழ்க்கையை நாசமாக்குவது இதெல்லாம் செய்பவர் தான் புதுப்பேட்டை ஹீரோ….

கதையை மையமாகக் கொள்ளாமல் களத்தை மையப்படுத்தி வெகுவேகமாக காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது…. இந்த அளவுக்கு வேகமான, சுவாரஸ்யமான காட்சிகளோடு ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம் தான்… இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்ற சகல துறைகளும் கச்சிதமாக இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது… குறிப்பாக பாலகுமாரனின் வசனம்….

ஹீரோவை எதிர்கோஷ்டி போட்டுத் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது… அந்தச் சூழ்நிலையில் வரும் பாடல் (கமல் பாடியது) மிக மிகப் பொருத்தமாக சொருகப் பட்டிருக்கிறது… கமலின் ஹைபிட்ச் வாய்ஸ் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் கிலி கொடுக்கிறது….

அதைப் போலவே பாடலே இல்லாமல் வெறும் இசையை மட்டுமே வைத்து ஹீரோ கேங்கில் சேர்ந்து வளரும் காட்சிகளை காட்டி இருப்பது அட்டகாசம்… பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கும் யுவன் ஏனோ பாடல்களில் கோட்டை விட்டு விட்டார்… மிக இனிமையான பாடல் ஆடியோ சிடியில் இடம் பெற்றிருந்தது… அது படத்தில் மிஸ்ஸிங்….

க்ளைமேக்ஸில் தன் குழந்தையைக் காப்பாற்ற தனுஷ் ஊரை விட்டே போக முடிவு செய்கிறார்…. வழக்கமான தமிழ் சினிமா க்ளைமேக்ஸை இயக்குநர் தேர்ந்தெடுத்து விட்டாரே என்று நினைக்கும்போதே… அடுத்த காட்சியில் தன் மகனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எதிரியைத் தாக்க புறப்படுகிறார் தனுஷ்…. வில்லன் வலியில்லாமல் சாக நினைத்து தன்னைத் தானே போட்டுக் கொள்வது கொடூரம்….

க்ளைமேக்ஸ் முடிந்தவுடன் வரும் Follow-up காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது… தவிர்த்திருக்கலாம்…

புதுப்பேட்டை…. இரத்தக் கோட்டை!!!