இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

ஜூலை 10, 2006

108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக…. இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!!

கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி…. முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது….

படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்…. ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது…. அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்து தங்கள் முதுகெலும்பை வளைத்து கூன் போட்டுக் கொண்டிருந்த காலமும் அதுதான்…..

சோழர்பாளையம் எனும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் சிற்றரசர் மொக்கைய மகாராஜா… வாரிசு இல்லாமல் துன்பப்படுகிறார்…. அவருக்கு பிறந்த 22 குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல பிரசவத்தின் போது இறந்து விடுகின்றன…. 23வது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்…. நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அரசரின் மைத்துனரும், ராஜகுருவுமாகிய சங்கிலிமாயன் ஜோசியம் பார்க்கிறார்…. ஒரு பிள்ளை சுயபுத்தியுடனும், ஒரு பிள்ளை சொல்புத்தியுடனும் நடந்துகொள்ளும் என ஜோசியர் சொல்ல…. சுயபுத்தி குழந்தையை எங்கேயாவது விட்டு விடுமாறு மருத்துவரிடம் சொல்கிறார்…. எதிர்பாராவிதமாக அந்தக் குழந்தை மருத்துவரிடமே வளர்கிறது…..

சொல்புத்தி குழந்தை வளர்ந்து வாலிபன் ஆகி சோழர்பாளையத்தை ராஜகுரு சங்கிலிமாயனின் ஆலோசனையுடன் வெள்ளையருக்கு சலாம்போட்டு ஆட்சி நடத்துகிறார்… முகம்மது – பின் – துக்ளக் ஸ்டைலில் 23ஆம் புலிகேசி நாட்டை ஆளுவது செம காமெடி….. வெள்ளையருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கோரி அண்டை நாட்டு மன்னன் புறா மூலம் கடிதம் அனுப்ப…. கடிதத்தை தூக்கிப் போட்டு விட்டு மன்னர் புறாவை ரோஸ்ட் செய்து தின்கிறார்….

ஆட்சியின் அலங்கோலத்தை கண்டு புரட்சிப்படை அமைக்கிறார் சொல்புத்தி குழந்தை…. இவர் உக்கிரபுத்தன் என்ற பெயரில் மருத்துவரால் வளர்க்கப்பட்டு நாளந்தா பல்கலைக்கழகம் சென்று படித்து வருகிறார்…. அந்நியரை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்களைத் திரட்டி மன்னருக்கு எதிராக கலகம் நடத்தி இறுதியில் மன்னரும் திருந்தி, ராஜகுருவும் திருந்தி சுபம்…

இம்சை அரசனாக வடிவேலு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்…. “மன்னா” என்று யாராவது அழைத்தால் “என்னா” என்று கூறும் தெனாவட்டு, அரண்மனையில் வேலை செய்யும் சோம்பேறிகளிடம் மாரடிக்கும் போது காட்டும் முகபாவம் (வடிவேலு ஸ்டைலில் முடியலை), அந்தப்புரத்தில் அலங்கரித்த கன்னியர்களிடம் போடும் ஆட்டம் என்று செம சூப்ப்ப்ப்பபர்மா……………

உக்கிரபுத்தனாக வரும் இன்னொரு வடிவேலு செம சீரியஸ்…. கொஞ்சம் கூட காமெடி கிடையாது…. “பூட்டியச் சிறையினை உடைப்போம், புரட்சியின் கதவைத் திறப்போம்” என நீலமலைத்திருடன் ஸ்டைலில் குதிரை மீது பயணம் செய்தபடியே கம்பீரமாக பாட்டுப் பாடியப்படியே இவர் வரும் ஓபனிங்குக்கு ரசிகர்களின் விசில் சத்தத்தால் தியேட்டர் கூரை அதிர்கிறது….. ரஜினி, கமல் ஓபனிங்குக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்…..

இயக்குனர் பிரபல கார்ட்டூனிஸ்ட் சிம்பு…. மதனின் சிஷ்யர்…. “மன்னா” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் நூற்றுக்கணக்கான ஜோக்குகள் வரைந்தவர்…. அந்த ஜோக்குகளையே படம் முழுக்க புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்…. வசனமும் இவரே…. அசத்தலாக இருக்கிறது…. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்திருக்கிறார்….

வீரபாண்டிய கட்டபொம்மனுடன் மோதும் நிக்சன் துரை இந்தப் படத்துக்கும் வருகிறார்…. “வானம் பொழிகிறது” ஸ்டைலில் வசனமும் உண்டு…..

ஒருகாட்சியில் (ஜால்ரா) அமைச்சர் சொல்லும் ஒரு வசனம் செம நக்கல்… “எங்க பரம்பரையே போராக இருந்தாலும் சரி… சூழ்ச்சியாக இருந்தாலும் சரி…. எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பது தான் வழக்கம்” :-)

அதுபோலவே மன்னர் கரடி வேட்டைக்குப் போய் கரடியே மன்னர் முகத்தில் காரி உமிழ்வது செம காமெடி…. ஒரு கட்டத்தில் காரி உமிழப்பட்ட மன்னரே வெள்ளையர் கலெக்டர் முகத்தில் காறி உமிழும்போது அமைச்சர் சொல்கிறார் “கரடி காறி உமிழ்ந்த எங்கள் மன்னரே உன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டார்… இதைவிட என்னய்யா உனக்கு கேவலம் வேணும்?” – அமைச்சராக இளவரசு நடித்திருக்கிறார்…. சரியான தேர்வு….

படத்தில் குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம் ஆர்ட் டைரக்சன் மற்றும் இசை…. இரண்டுமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகிறது…. பின்னணிப் பாடகர்களின் குரல் 1960களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது….

ராஜமாதாவாக மனோரமா, ராஜகுருவாக நாசர், கொல்லனாக மனோபாலா, மருத்துவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, கதாநாயகிகளாக தேஜாஸ்ரீ மற்றும் இன்னொரு பெண் (அழகியில் “ஒளியிலே தெரிவது தேவைதையா” பாடலில் வரும் அதே தேவதை) நீண்டநாள் கழித்து ஜோசியராக வி.எஸ். ராகவன், தளபதியாக ஸ்ரீமன் என்று எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்….

வடிவேலு குதிரை ஓட்டுகிறார், கத்திச்சண்டை போடுகிறார், காதல் காட்சிகளில் கலக்குகிறார்… ஹீரோக்களே உஷார்…. உங்களுக்கு போட்டி சக ஹீரோக்கள் அல்ல….

இந்தப் படத்தில் சொல்லவேண்டிய விஷயங்கள் ரொம்ப இருந்தாலும் கூட விமர்சனம் நீண்டுக்கொண்டே போவதால் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்….. இந்தப் படம் பார்ப்பது நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்….

இம்சை அரசன் – இடி முழக்கம்!


சூப்பர்மேன் ரிடர்ன்ஸ்

ஜூலை 5, 2006

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சூப்பர்மேன் திரும்பி வந்திருக்கிறார்… இதுவரை 4 பாகங்கள் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்து வெளிவந்தது…. 5வது பாகமான இந்தப் படம் புது சூப்பர் மேனான பிராண்டன் ரூத் நடித்து வெளிவந்திருக்கிறது…. பிராண்டன் ரூத் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் இளவயது தோற்றத்திலேயே அச்சு அசலாக இருக்கிறார்…. சுமார் ஆறரை அடி உயரம்… செம வெயிட் என்று அமர்க்களமான தோற்றம்….

படத்தின் கதையெல்லாம் சும்மா கப்சா தான்…. வேறு யாராவது ஹீரோ செய்தால் கடுப்பாகி விடுவோம்…. சாகசம் செய்வது சூப்பர்மேன் என்பதால் மன்னித்து விட்டு விடலாம்…. சூப்பர்மேன் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் விமானத்தை தன் சக்தி கொண்டு தூக்கி(?) காப்பாற்றுகிறார்…. அப்போதே ஆரம்பித்து விடுகிறது பூச்சுற்றல்….

இந்தப் படத்தில் மெலிதாக இழையோடும் காதல், பாசம் படத்துக்குப் பெரிய பலம்…. ஜூனியர் சூப்பர்மேன் அழகாக இருக்கிறான்…. சூப்பர்மேன் (முன்னாள்) காதலியும் சூப்பராகவே இருக்கிறார்…

கிரிப்டன் கிரகத்தில் பிறந்த சூப்பர் மேன் 4 வயதிலேயே தன் கிரகத்தை விட்டுப் பிரிந்து பூமியில் வாழவேண்டிய சூழ்நிலை…. பூமியில் இருக்கும் எந்த சக்தியாலும் சூப்பர்மேனை அழிக்க முடியாது…. கிரிப்டன் கிரகத்தின் கிரிஸ்டல் போன்ற ஒரு தாது கொண்டு மட்டுமே சூப்பர்மேனை அழிக்கமுடியும் என்று தெரிந்து கொண்ட வில்லன் அந்த தாதுவை கொண்டு மேலும் சில விசித்திர ஆய்வுகளைச் செய்து ஒரு புதிய கண்டத்தை உருவாக்க நினைக்கிறார்…. அந்தக் கண்டம் உருவானால் அமெரிக்கா முழுவதுமே அழிந்து விடும்….

அந்தக் கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும்போது சூப்பர்மேன் முட்டுக்கட்டையாக வருகிறார்…. இறுதியில் சூப்பர் மேனே அந்தக் கண்டத்தை தூக்கிக் கொண்டு போய் (அட்ரா…. அட்ரா….) விண்வெளியில் தூக்கிப் போட்டு விடுகிறார்…. அந்தக் கண்டம் கிரிப்டன் கிரகத்தின் தாது கொண்டு உருவாக்கப்பட்டதால் சூப்பர்மேன் உயிரிழக்கிறார்…

உயிரிழந்தாலும் முன்போலவே வந்து காதலியைச் சந்தித்துக் கொஞ்சுகிறார்…. மகனிடம் (ஆனா இவனுக்கு சூப்பர் மேன் இனிஷியல் இல்லே…. அதற்கு ஒரு இளிச்சவாயன் இருக்கிறார்) பாசம் காட்டுகிறார்…. சூப்பர்மேன் ஆச்சே… நம்பித்தான் தீரணும்…..

பின்னணி இசை மிரட்டுகிறது…. ஆனாலும் சூப்பர்மேனின் ட்ரேட் மார்க் இசை பழைய பாகங்களில் இருந்ததுபோல இல்லை…. ரொம்பவும் மைல்ட் ஆக இருக்கிறது….. படத்தின் டைட்டிலுக்கு போடப்படும் பின்னணி இசை நிஜமாகவே பயமுறுத்துகிறது…. படத்தில் மிஸ் செய்யக்கூடாத விஷயம் டைட்டில்…. மிகப் பிரம்மாண்டமான கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாத 3டி அனிமேஷன்….

பலகாட்சிகளில் எது கிராபிக்ஸ் சூப்பர்மேன்? எது ஒரிஜினல் சூப்பர்மேன் என்று கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியம்…. வில்லனாக வரும் மொட்டை சூப்பராக நடித்திருக்கிறார்…. அவரது செட்டப்பும் கலக்கி இருக்கிறார்…..

படம் முடித்து வெளியே வரும்போது எங்குமே பூக்கடைகளைக் காண முடியவில்லை…. காரணம் படம் பார்த்தவர்களின் காதுகளில் தியேட்டர்காரர்களே சொருகி அனுப்புவது தான்…. :-)

சூப்பர்மேன் – அசத்துகிறார்….


பாரிஜாதம்

ஜூலை 3, 2006

கத்தி இல்லை… இரத்தம் இல்லை… அவனைப் போட்டுர்றேன்… அவன் கையை வெட்டு, காலை வெட்டு…. ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்…… டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. இரைச்சல் இல்லை….. முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்…. ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்….

ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது…. சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா…. இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்…. தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்….. சொல்லுவதற்கு முன்பே உயிரை வேறு விட்டு விடுகிறார்….. உண்மை தெரிந்து கதாநாயகன் கதாநாயகியை கைபிடிப்பது என்ற ஒற்றை வரி கதை….. தன் ட்ரீட்மெண்டால் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார் பாக்யராஜ்….

குறிப்பாக ஹீரோயின் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களை தன் மகனாகவும், ஹீராயினாகவும் சீதா கற்பனை செய்து கொள்ள விஷுவல் ட்ரீட்மெண்ட் சூப்பர்…. ஹீரோயின் சரண்யாவைப் பொறுத்தவரை குத்துவிளக்கு மாதிரி இருக்கிறார்…. சினிமாவுக்கு ஏற்றத் தோற்றம் அவருக்கு இல்லை… ஹீரோ பிருத்வி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்….. இருக்காதா பின்னே? எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே?

இடைவேளைக்குப் பிறகே பாக்யராஜ் சம்பூர்ணம் என்ற கேரக்டராக உள்ளே நுழைகிறார் (விசு ஸ்டைல்?)…. பாக்யராஜ் தான் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறாராம்…. பிரகாஷ்ராஜுக்கு ஏற்ற வெயிட் கேரக்டர் இல்லை…. அவருக்கு நடிக்க ஸ்கோப் ரொம்பவும் கம்மியாக இருக்கிறது…. ஹீரோ அப்படியே 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும் பாக்யராஜை இமிடேட் செய்கிறார்….. படம் முழுவதும் இழைக்கப்பட்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை படத்துக்குப் பலம்…..

படத்தின் ஒரிஜினல் கதையை விட ஹீரோயின் (எழுத்தாளராம்) எழுதும் பாரிஜாதம் கதை சூப்பராக இருக்கிறது… அந்தக் கதையின் முடிவு ரொம்பவும் சோகம்….

ரொம்ப நாளுக்குப் பிறகு காதுக்கு இனிமையான பின்னணி இசை…. புதுமுக இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது…. ஒரு பாடல் ரொம்பவும் அருமை…..

பாரிஜாதம் – நன்றாகவே மணக்கிறது….