சென்னை நினைவுகள்!

ஆகஸ்ட் 31, 2006

இப்போது வலைப்பூக்களில் சென்னையைப் பற்றி ஒரு பதிவு போடுவது அத்தியாவசியமாகி விட்டதால் இதோ நமது பதிவு…. சென்னையைப் பற்றிய நினைவுகளை வரிசைக்கிரமமாக நினைவுப்படுத்துவது சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்து சென்னையிலேயே வாழ்பவனுக்கு ரொம்பவும் கடினம்…. எனினும் முயற்சிக்கிறேன்….

நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் கிராமமான (இப்போ சிட்டி லிமிட்டிலிருந்து 3 கி.மீ) மடிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான்….

என் குழந்தைப் பருவத்தின் போது மடிப்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் நுழைவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்…. மடிப்பாக்கத்திலிருந்து ஒரு குதிரை வண்டிப் பிடித்து சுமார் மூன்றரை கி.மீ. பயணம் செய்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து மின் தொடர் வண்டியில் செல்ல வேண்டும்….

அதன் பிறகு ஓரிரண்டு பேருந்துகள் மடிப்பாக்கத்துக்கு 80களின் ஆரம்பத்தில் வரத் தொடங்கியதாம்… அதுபோல முதலில் வந்தப் பேருந்து 18D…. கீழ்க்கட்டளை – பெரியார் பாலம் (சிம்சன்)… என் பாட்டனார் வீடு சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது…. அங்கு செல்ல 18Dயில் தான் வரவேண்டும்…. சிறு வயதில் அந்தப் பேருந்தில் வந்தபோது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கும் ஒரு விஷயம் அப்பு ஹோர்டிங்….

சென்னை நந்தனம் சிக்னலில் மிகப் பெரியதாக (இப்போ அதுக்கெல்லாம் தாத்தா சைஸில் ஹோர்டிங்குகள் இருக்கிறது) வரையப்பட்டிருந்த அப்பு ஹோர்டிங் என் நினைவில் மங்கலாகத் தெரிகிறது…. டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அது வரையப்பட்டிருக்கலாம்…. சிறு வயது என்பதால் எதற்காக வரைந்தார்கள் என்று நினைவில்லை….

அப்புறம் சிம்சனுக்குப் பின்னால் இருக்கும் மே தினப்பூங்கா…. இன்று கூட அந்தப் பூங்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தமாதிரியே தான் இருக்கிறது…. பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை…. இப்போது கொஞ்சம் பசுமை குறைந்தது மாதிரி தெரிகிறது….

சிறு வயதில் பீச்சுக்குப் போவது என்பது ஏதோ கும்பமேளாவுக்கு போவது மாதிரி ஒரு அதிசய விஷயம் எங்களுக்கெல்லாம்… பொங்கல் சீஸனில் எக்ஸிபிஷன் போகும் போது பீச்சுக்கும் அப்படியே ஒரு விசிட் அடிப்போம்…. வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் என் தந்தையார் அலைகளில் விளையாட அனுமதிக்க மாட்டார்… அடம் பிடித்து அழுதுப் புரண்டால் ஓரமாக நிற்க அனுமதிப்பார்…. கடுப்பாக இருக்கும்… கணுக்கால் வரையிலான நீரில் தான் நிற்க வேண்டும்…. எனக்கு இன்னமும் சென்னையில் பிரமிப்பு தரும் விஷயம் வங்கக் கடல் தான்…. பீச்சுக்கு போகும் போதெல்லாம் அலைகள் ஏதோ என் காதில் ரகசியம் ஒன்றை சொல்ல வருவது போல ஒரு உணர்வு… இன்னமும் அந்த உணர்வுகளை உணர்கிறேன்….

இப்போதெல்லாம் பீச்சுக்கு போனால் அலைகளில் நனைவதில்லை…. சிறுவயதில் ஆசைப் பட்டேன்… ஆனால் இப்போது நனைவதற்கு வெட்கமாக இருக்கிறது…. சிறு குழந்தைகளும், அழகுப் பெண்களும் அலையில் ஆட்டம் போடும் போது எருமை மாடு மாதிரி நாமும் குதித்தால் ஒரு மாதிரியாக நினைப்பார்களே என்று சங்கோஜமாக இருக்கிறது…. சில நண்பர்களோடு ஆளரவமற்ற திருவான்மியூர் பீச்சுக்குச் செல்லும் போது (இப்போ அங்கே கூட செம கூட்டம் தான்) குளிப்பதுண்டு…..

இங்கே என்னை எப்பவும் கவர்ந்திழுக்கும் ஒரு விஷயம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை நடத்தும் டிரேட் பேர் தான்…. சிறு வயதில் ஆண்டுக்கு ஒரு முறை அப்பா கூட்டிப் போவார்…. சம்பிரதாயமாக அரசு ஸ்டால்களை எந்த ஆர்வமும் இன்றி அந்தக் காலத்தில் வெறித்துப் பார்ப்பேன்…. டிரேட் பேர் முகப்பில் அந்தக் காலத்தில் வைக்கப்படும் மோதிரம் கடிக்கும் எம்.ஜி.ஆர் கட்-அவுட் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று….

மிளகாய் பஜ்ஜி இன்று சென்னையில் எல்லா டீக்கடைகளிலும் கூட கிடைக்கின்றன…. எனக்குத் தெரிந்து இந்த கான்செப்ட் முதலில் வந்ததே அந்த எக்ஸிபிஷனில் தான்… செம மட்டமான எண்ணையில் பொறித்தெடுக்கப் பட்டாலும் அந்த மிளகாய் பஜ்ஜியின் சுவையே தனி தான்….

எக்ஸிபிஷனில் பாம்பு உடலுடன் மங்கை, மாயக்கண்ணாடி போன்ற காமெடிகளும் உண்டு…. ஜயண்ட் வீலில் சுற்றுவது என்றாலே எனக்கு நிரம்ப பயம்…. மிகப் பெரிய அந்த வீலில் மேலே ஏறும்போது ஒன்றும் தெரியாது…. வீல் கீழே இறங்கும்போது செமையாக வயத்தைப் பிரட்டும்… ஆனாலும் அந்த ஜயண்ட் வீலில் மேலே போகும்போது தெரியும் ரம்மியமான காட்சிகளுக்காகவே (கூவம் கூட தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு நல்லா தான் இருக்கும்) அதில் போகலாம்…. இப்பொதும் கூட நண்பர்களோடு ஜாலியாக எக்ஸிபிஷனுக்கு செல்லும் வழக்கம் எனக்குண்டு….

இந்நகரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியோ, பொங்கலோ அல்ல… ஆயுத பூஜை தான்… ஆயுத பூஜை நேரத்தில் சென்னையின் ஏதோ மார்க்கெட் வீதிக்கு சென்றுப் பாருங்கள்… அந்தப் பிரும்மாண்டம் புரியும்… குறிப்பாக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு நெரிசல்…. யப்பா…. தாங்க முடியாது….

நகரில் எப்போதுமே என்னை பிரமிக்க வைப்பவை தியேட்டர்கள் தான்… ஹையர் செகண்டரி படிக்கும்போது தினமும் கட் அடித்து விட்டு சிட்டிக்கு வந்து நண்பர்களோடு படங்கள் பார்ப்பது வழக்கம்… சென்னனயில் கிட்டத்தட்ட 80 சதம் தியேட்டர்களுக்கும் போய்ப் பார்த்தாயிற்று…. என் அனுபவத்தில் சென்னையில் Best தியேட்டர் காம்ப்ளக்ஸ் சத்யம் தான்… சிறு வயதில் எனக்கு பிரமிப்பு ஊட்டிய தியேட்டர் தேவி…. மற்றபடி கெயிட்டி, ஜோதி தியேட்டர்களும் நம்ம Favourite லிஸ்ட்டில் வேறு சில காரணங்களுக்காக இருந்தது :-)

அப்போதும், இப்போதும், எப்போதும் வெறுப்பேற்றுவது டிராபிக் நெரிசலே…. என் பெங்களூர் நண்பர்கள் சென்னைக்கு இந்த விஷயத்துலே கோயில் கட்டி கும்பிடலாம்டா என்பார்கள்…. ஆனாலும் எனக்கென்னவோ இந்த நெரிசல் ரொம்பவும் வெறுப்பேற்றுகிறது…. குறிப்பாக நந்தனம் சிக்னல்… பீக் அவர்ஸில் அந்த சிக்னல் வழியாக வந்தால் குறைந்தது 3 ரெட் சிக்னலாவது வாங்குவீர்கள்…. பீக் அவர்ஸ் என்றில்லை… மற்ற நேரங்களில் சென்றாலும் ஒரு முறையாவது நின்று தான் செல்ல வேண்டும்….

சென்னைத் தமிழர்களின் மொழி பற்றி பத்திரிகைகளும், சினிமாக்களும் ரொம்ப நக்கலடிக்கிறார்கள்… கொஞ்சம் மோசம் தான்…. அந்த அளவுக்கு மோசமாக எல்லாம் இங்கே பேசுவதில்லை… ரொம்பவும் மிகைப்படுத்தி சொல்கிறார்கள் சென்னை செந்தமிழை…. என்ன எதுவாக இருந்தாலும் சென்னைத் தமிழன் ஆரம்பிக்கும் போது “ஓ……..” என்று ஆரம்பிப்பான் ;-) அவ்வளவுதான்…..

சென்னைப் பற்றி நிறையப் பேசலாம்…. பேசிக்கொண்டே இருக்கலாம்…. ஆனால் எழுத்துக்களில் சொல்வது எனக்கு கொஞ்சம் கடினமாக இருக்கிறது….

சென்னை – தமிழர்களின் இன்றைய அன்னை!


அ.தி.மு.க. கிரியேஷன்ஸ்

ஆகஸ்ட் 30, 2006

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 95 லட்சம் மானியமாக வழங்கப்படுவதைக் கண்டு வயிறு எரிந்து ஆரியபவன் இட்லி சாப்பிடும் சின்ன சோ எஸ்.வி.சேகர் சட்டமன்றத்தில் இதுபோல ராஜாஜி மற்றும் மற்ற பிராமணர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்தால் இந்த அரசு மானியம் வழங்குமா என்று கேணைத்தனமாக கேள்வி கேட்டிருக்கிறார்…. எஸ்.வி.சேகரின் இந்த கன்னிப்பேச்சை அவரது கட்சியின் தலைவரான அம்மாவும் ரொம்பவும் ரசித்து சிலாகித்ததாக அக்ரஹாரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….

இனி திரைப்படங்கள் எப்படியெல்லாம் தயாரிக்கலாம் என அக்ரஹாரத்து தி.மு.க சார்பில் சில வழிகாட்டுதல்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது… என்னென்ன வழிகாட்டுதல்கள் என அறிய முயற்சித்தபோது கபாலீசுவரர் கோயில் வாசலில் குச்சி விற்றுக் கொண்டிருந்தவர் ஒருவர் சில டிப்ஸ்கள் கொடுத்தார்…. இந்த டிப்ஸ்களில் பெரும்பாலானவை அந்த வழிகாட்டுதல்களில் இடம்பெறும் என நம்பப்படுகிறது….

1) இனி எடுக்கப்படும் எல்லாப் படங்களுமே அம்மா படத்துக்கு பூஜை போட்டே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

2) யாருடைய வாழ்க்கை வரலாற்றையாவது படமாக எடுக்க வேண்டுமென்றால் பத்திரிகையாளர் சோ அவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கச் சொல்கிறாரோ அவருடைய வரலாறை தான் படமாக எடுக்க வேண்டும்… சோ அவர்களிடம் ராஜாஜி, அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் புத்தகம் எழுதிய கே.சி. லட்சுமிநாராயணன், தினமலர் பவுண்டர் டி.வி.ராமசுப்பையர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைக்கதை அமைத்து தயராகவே இருக்கிறது.

3) படங்களில் சண்டைக்காட்சிகள் அமைக்க செங்கோட்டையன், சேகர்பாபு போன்றவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்…. ஸ்டண்ட் கலைஞராக கண்டிப்பாக கலைராஜன் நடித்தே ஆகவேண்டும்…. மைக்கினை தலைக்கு மேலே சுற்றி கதாநாயகனை அடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம் பெறவேண்டும்….

4) குரூப் டேன்ஸர்களாக அ.தி.மு.க மகளிர் அணியினர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்…. கவர்ச்சி தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற வாயிலில் சுப்பிரமணிய சாமியை வரவேற்க மகளிர் அணியினர் ஆடிய நடனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்…

5) படங்களுக்கு வசனகர்த்தாவாக முத்தமிழ் வித்தகர் காளிமுத்துவை பயன்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமாக்கப்படும்…. இரட்டை அர்த்த வசனங்கள் தேவைப்பட்டாலும் அவரே எழுதித்தரத் தயாராக இருக்கிறார்…. அவரிடம் “கும்பிடத் தோன்றினால்……. கூப்பிடத் தோன்றினால்” டைப்பில் நிறைய வசனங்கள் கைவசம் தயாராகவே இருக்கிறது…..

6) நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்பட வேண்டும்… அதுவும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருப்பதுபோல மட்டுமே காண்பிக்கப் படவேண்டும்….

7) திரைப்படங்களில் வரும் போலிசார் வில்லன்கள் மீது கஞ்சா கேஸ் மட்டுமே போடவேண்டும்…. இதற்கும் ஒரிஜினல் கஞ்சாவைத் தான் பயன்படுத்த வேண்டும்….

8) படங்களின் இயக்குனர்களை அம்மாவே முடிவு செய்வார்…. அம்மா சொல்படி தான் படத்தை இயக்க வேண்டும்… தேவைப்பட்டால் ஒரே படத்துக்கு 50 அல்லது 100 இயக்குனர்கள் வரை அம்மாவே மாற்றுவார்….

9) படங்களில் திருமணக் காட்சிகள் அமைக்கப்பட்டால் அந்தக் காட்சி நூறுகோடி ரூபாய் செலவில் தான் அமைக்கப்படவேண்டும்…. அந்தக் காட்சியில் போலிஸ் கமிஷனர் சாம்பார் வாளி தூக்கி பரிமாறுவது போன்ற காட்சி கட்டாயம் இடம் பெற வேண்டும்…

10) இனி எடுக்கப்படும் படங்களுக்கு கதாநாயகர்களே இருக்கக்கூடாது… கதாநாயகிகள் மட்டும் தான் இருக்க வேண்டும்… படத்தில் இடம் பெறும் ஆண் கதாபாத்திரங்கள் கதாநாயகி காலில் குப்புற விழுந்து வணங்க வேண்டும்….

- அக்ரஹாரத்து தி.மு.கவின் வழிகாட்டுதல்கள் தொடரும்


சம்திங்…. சம்திங்….

ஆகஸ்ட் 7, 2006

பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்….. போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு?

கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் “உனக்கும், எனக்கும்”…. சம்திங்… சம்திங்… இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்…. இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்….

தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்…. திருமணத்துக்கு வந்தவர் அங்கே இருக்கும் ஒரு கிராமத்துப் பைங்கிளியிடம் மனதை பறிகொடுக்கிறார்….. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க…. சம்திங்…. சம்திங்….

காதலுக்கு வழக்கம்போல அந்தஸ்தும் ஒரு பிரச்சினை…. வேறு ஒரு பணக்காரர் ஒருவரும் தன் மகளுக்கு பாரின் ரிடர்ன் மாப்பிள்ளையை பிராக்கெட் போட நினைக்க…. கிராமத்துப் பிகரின் ஊரிலும் ஒரு வில்லன் அவளை அடைய நினைக்க…. இடையில் பிகரின் அண்னனும் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை மண்ணின் பாரம்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என பிகு பண்ண…. எல்லாம் முடிந்து சுபம்….

ஹீரோ ஜெயம் ரவிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றிப் படம்…. இவர் ஏனோ இவர் அண்ணனின் இயக்கத்தில் தான் நன்றாக ஜொலிக்கிறார்…. நடனம், ஆக்சன் என்று தூள்பரத்துகிறார்…. மெலிதான நகைச்சுவையும் இவருக்குப் பலம்…. ஹீரோயினாக த்ரிஷா…. பாவாடைத் தாவணியில் பாங்காக இருக்கும் ஒரே தமிழ் நடிகை இப்போதைக்கு இவர் தான்…. தைரியமாக முகத்துக்கு குளோஷப் ஷாட் வைக்க முடிகிறது…. நன்றாக நடிக்கவும் செய்கிறார்….

நிறைய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் அசால்ட்டாக படத்தில் கோல் அடிப்பது பிரபுவும், பாக்யராஜும் தான்…. குறிப்பாக பிரபு…. அழகாகியிருக்கிறார்…. சின்னத்தம்பி படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது இந்தப் படத்தில் அவரது தோற்றம்…. இந்த ஜெனரேஷன் நடிகர்கள் அவரிடம் வசன உச்சரிப்பு கற்றுக் கொண்டால் தேவலை…. தங்கை மீது காட்டும் அதீத பாசமாகட்டும், தங்கையை அவமானப்படுத்தும் போது தன் கோபத்தை அடக்கிக் கொள்வதிலாகட்டும் அசத்துகிறார் இளையதிலகம்…. பாக்யராஜூக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் அமர்க்களமாகவே இருக்கிறது…. அவர் நடித்த காட்சிகள் வரைக்கும் அவரே இயக்கிக் கொண்டாரோ என்னவோ? செம கலக்கல்……

படத்துக்கு பெரிய பலம் பாடல்கள்…. தேனாக தித்திக்கிறது…. இசை தேவிஸ்ரீபிரசாத்….

இயக்குனர் ராஜா ரொம்பவும் புத்திசாலி…. காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்திப் போகிறார்…. குறிப்பாக Translition எனப்படும் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடைப்பட்ட பிரேம்களை உருவாக்க இயக்குனரும், எடிட்டரும் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்…. உதாரணமாக பாரின் அப்பா லண்டனில் இருந்து கிளம்பும்போது பிளைட் வானத்தில் பறக்கிறது…. வானத்தை அப்படியே காட்டுபவர்கள் ஒரு தும்பியையும் காட்டுகிறார்கள்…. அதாவது பாரினில் இருந்து கிராமத்துக்கு வந்து விட்டாராம்…. இதுபோல Technically Sound காட்சிகள் ஏராளம்…..

திரிஷா ஹீரோவை லண்டன் குரங்கு எனச் சொல்லும் காட்சியில் ஆரம்பித்து அதே ஷாட்டில் மணிவண்னன் மற்றும் அவரது குடும்பமும் அறிமுகமாகும் காட்சியை மிக நீண்ட டேக்காக எடுத்திருக்கிறார் இயக்குனர்….. ஏதாவது ஒரு ஆர்ட்டிஸ்ட் டைமிங் மிஸ் செய்தாலே ஏராளமான பிலிம் வேஸ்ட் ஆகும் ரிஸ்க் இருந்தும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சியை இயக்கியிருக்கிறார்…. இசையும், கேமிராவும் அந்தக் காட்சிக்கு துணை செய்கிறது….

வானில் இருக்கும் இரு நட்சத்திரங்களைக் காட்டி ஒரு நட்சத்திரம் நான், இன்னொன்று என் தங்கை என்று பிரபு சொல்வது ரொம்பவும் ஜாலியான கற்பனை… இரு நட்சத்திரங்களுக்கு இடையில் மூன்றாவது நட்சத்திரம் தோன்றுவது சூப்பர்…..

ஒரு அரைச்ச மாவு கதை தான் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பாடல்கள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜா…..