சம்திங்…. சம்திங்….

ஆகஸ்ட் 7, 2006

பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்….. போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு?

கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் “உனக்கும், எனக்கும்”…. சம்திங்… சம்திங்… இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்…. இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்….

தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்…. திருமணத்துக்கு வந்தவர் அங்கே இருக்கும் ஒரு கிராமத்துப் பைங்கிளியிடம் மனதை பறிகொடுக்கிறார்….. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க…. சம்திங்…. சம்திங்….

காதலுக்கு வழக்கம்போல அந்தஸ்தும் ஒரு பிரச்சினை…. வேறு ஒரு பணக்காரர் ஒருவரும் தன் மகளுக்கு பாரின் ரிடர்ன் மாப்பிள்ளையை பிராக்கெட் போட நினைக்க…. கிராமத்துப் பிகரின் ஊரிலும் ஒரு வில்லன் அவளை அடைய நினைக்க…. இடையில் பிகரின் அண்னனும் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை மண்ணின் பாரம்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என பிகு பண்ண…. எல்லாம் முடிந்து சுபம்….

ஹீரோ ஜெயம் ரவிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றிப் படம்…. இவர் ஏனோ இவர் அண்ணனின் இயக்கத்தில் தான் நன்றாக ஜொலிக்கிறார்…. நடனம், ஆக்சன் என்று தூள்பரத்துகிறார்…. மெலிதான நகைச்சுவையும் இவருக்குப் பலம்…. ஹீரோயினாக த்ரிஷா…. பாவாடைத் தாவணியில் பாங்காக இருக்கும் ஒரே தமிழ் நடிகை இப்போதைக்கு இவர் தான்…. தைரியமாக முகத்துக்கு குளோஷப் ஷாட் வைக்க முடிகிறது…. நன்றாக நடிக்கவும் செய்கிறார்….

நிறைய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் அசால்ட்டாக படத்தில் கோல் அடிப்பது பிரபுவும், பாக்யராஜும் தான்…. குறிப்பாக பிரபு…. அழகாகியிருக்கிறார்…. சின்னத்தம்பி படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது இந்தப் படத்தில் அவரது தோற்றம்…. இந்த ஜெனரேஷன் நடிகர்கள் அவரிடம் வசன உச்சரிப்பு கற்றுக் கொண்டால் தேவலை…. தங்கை மீது காட்டும் அதீத பாசமாகட்டும், தங்கையை அவமானப்படுத்தும் போது தன் கோபத்தை அடக்கிக் கொள்வதிலாகட்டும் அசத்துகிறார் இளையதிலகம்…. பாக்யராஜூக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் அமர்க்களமாகவே இருக்கிறது…. அவர் நடித்த காட்சிகள் வரைக்கும் அவரே இயக்கிக் கொண்டாரோ என்னவோ? செம கலக்கல்……

படத்துக்கு பெரிய பலம் பாடல்கள்…. தேனாக தித்திக்கிறது…. இசை தேவிஸ்ரீபிரசாத்….

இயக்குனர் ராஜா ரொம்பவும் புத்திசாலி…. காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்திப் போகிறார்…. குறிப்பாக Translition எனப்படும் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடைப்பட்ட பிரேம்களை உருவாக்க இயக்குனரும், எடிட்டரும் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்…. உதாரணமாக பாரின் அப்பா லண்டனில் இருந்து கிளம்பும்போது பிளைட் வானத்தில் பறக்கிறது…. வானத்தை அப்படியே காட்டுபவர்கள் ஒரு தும்பியையும் காட்டுகிறார்கள்…. அதாவது பாரினில் இருந்து கிராமத்துக்கு வந்து விட்டாராம்…. இதுபோல Technically Sound காட்சிகள் ஏராளம்…..

திரிஷா ஹீரோவை லண்டன் குரங்கு எனச் சொல்லும் காட்சியில் ஆரம்பித்து அதே ஷாட்டில் மணிவண்னன் மற்றும் அவரது குடும்பமும் அறிமுகமாகும் காட்சியை மிக நீண்ட டேக்காக எடுத்திருக்கிறார் இயக்குனர்….. ஏதாவது ஒரு ஆர்ட்டிஸ்ட் டைமிங் மிஸ் செய்தாலே ஏராளமான பிலிம் வேஸ்ட் ஆகும் ரிஸ்க் இருந்தும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சியை இயக்கியிருக்கிறார்…. இசையும், கேமிராவும் அந்தக் காட்சிக்கு துணை செய்கிறது….

வானில் இருக்கும் இரு நட்சத்திரங்களைக் காட்டி ஒரு நட்சத்திரம் நான், இன்னொன்று என் தங்கை என்று பிரபு சொல்வது ரொம்பவும் ஜாலியான கற்பனை… இரு நட்சத்திரங்களுக்கு இடையில் மூன்றாவது நட்சத்திரம் தோன்றுவது சூப்பர்…..

ஒரு அரைச்ச மாவு கதை தான் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பாடல்கள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜா…..


இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

ஜூலை 10, 2006

108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக…. இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!!

கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி…. முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது….

படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்…. ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது…. அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்து தங்கள் முதுகெலும்பை வளைத்து கூன் போட்டுக் கொண்டிருந்த காலமும் அதுதான்…..

சோழர்பாளையம் எனும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் சிற்றரசர் மொக்கைய மகாராஜா… வாரிசு இல்லாமல் துன்பப்படுகிறார்…. அவருக்கு பிறந்த 22 குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல பிரசவத்தின் போது இறந்து விடுகின்றன…. 23வது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்…. நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அரசரின் மைத்துனரும், ராஜகுருவுமாகிய சங்கிலிமாயன் ஜோசியம் பார்க்கிறார்…. ஒரு பிள்ளை சுயபுத்தியுடனும், ஒரு பிள்ளை சொல்புத்தியுடனும் நடந்துகொள்ளும் என ஜோசியர் சொல்ல…. சுயபுத்தி குழந்தையை எங்கேயாவது விட்டு விடுமாறு மருத்துவரிடம் சொல்கிறார்…. எதிர்பாராவிதமாக அந்தக் குழந்தை மருத்துவரிடமே வளர்கிறது…..

சொல்புத்தி குழந்தை வளர்ந்து வாலிபன் ஆகி சோழர்பாளையத்தை ராஜகுரு சங்கிலிமாயனின் ஆலோசனையுடன் வெள்ளையருக்கு சலாம்போட்டு ஆட்சி நடத்துகிறார்… முகம்மது – பின் – துக்ளக் ஸ்டைலில் 23ஆம் புலிகேசி நாட்டை ஆளுவது செம காமெடி….. வெள்ளையருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கோரி அண்டை நாட்டு மன்னன் புறா மூலம் கடிதம் அனுப்ப…. கடிதத்தை தூக்கிப் போட்டு விட்டு மன்னர் புறாவை ரோஸ்ட் செய்து தின்கிறார்….

ஆட்சியின் அலங்கோலத்தை கண்டு புரட்சிப்படை அமைக்கிறார் சொல்புத்தி குழந்தை…. இவர் உக்கிரபுத்தன் என்ற பெயரில் மருத்துவரால் வளர்க்கப்பட்டு நாளந்தா பல்கலைக்கழகம் சென்று படித்து வருகிறார்…. அந்நியரை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்களைத் திரட்டி மன்னருக்கு எதிராக கலகம் நடத்தி இறுதியில் மன்னரும் திருந்தி, ராஜகுருவும் திருந்தி சுபம்…

இம்சை அரசனாக வடிவேலு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்…. “மன்னா” என்று யாராவது அழைத்தால் “என்னா” என்று கூறும் தெனாவட்டு, அரண்மனையில் வேலை செய்யும் சோம்பேறிகளிடம் மாரடிக்கும் போது காட்டும் முகபாவம் (வடிவேலு ஸ்டைலில் முடியலை), அந்தப்புரத்தில் அலங்கரித்த கன்னியர்களிடம் போடும் ஆட்டம் என்று செம சூப்ப்ப்ப்பபர்மா……………

உக்கிரபுத்தனாக வரும் இன்னொரு வடிவேலு செம சீரியஸ்…. கொஞ்சம் கூட காமெடி கிடையாது…. “பூட்டியச் சிறையினை உடைப்போம், புரட்சியின் கதவைத் திறப்போம்” என நீலமலைத்திருடன் ஸ்டைலில் குதிரை மீது பயணம் செய்தபடியே கம்பீரமாக பாட்டுப் பாடியப்படியே இவர் வரும் ஓபனிங்குக்கு ரசிகர்களின் விசில் சத்தத்தால் தியேட்டர் கூரை அதிர்கிறது….. ரஜினி, கமல் ஓபனிங்குக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்…..

இயக்குனர் பிரபல கார்ட்டூனிஸ்ட் சிம்பு…. மதனின் சிஷ்யர்…. “மன்னா” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் நூற்றுக்கணக்கான ஜோக்குகள் வரைந்தவர்…. அந்த ஜோக்குகளையே படம் முழுக்க புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்…. வசனமும் இவரே…. அசத்தலாக இருக்கிறது…. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்திருக்கிறார்….

வீரபாண்டிய கட்டபொம்மனுடன் மோதும் நிக்சன் துரை இந்தப் படத்துக்கும் வருகிறார்…. “வானம் பொழிகிறது” ஸ்டைலில் வசனமும் உண்டு…..

ஒருகாட்சியில் (ஜால்ரா) அமைச்சர் சொல்லும் ஒரு வசனம் செம நக்கல்… “எங்க பரம்பரையே போராக இருந்தாலும் சரி… சூழ்ச்சியாக இருந்தாலும் சரி…. எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பது தான் வழக்கம்” :-)

அதுபோலவே மன்னர் கரடி வேட்டைக்குப் போய் கரடியே மன்னர் முகத்தில் காரி உமிழ்வது செம காமெடி…. ஒரு கட்டத்தில் காரி உமிழப்பட்ட மன்னரே வெள்ளையர் கலெக்டர் முகத்தில் காறி உமிழும்போது அமைச்சர் சொல்கிறார் “கரடி காறி உமிழ்ந்த எங்கள் மன்னரே உன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டார்… இதைவிட என்னய்யா உனக்கு கேவலம் வேணும்?” – அமைச்சராக இளவரசு நடித்திருக்கிறார்…. சரியான தேர்வு….

படத்தில் குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம் ஆர்ட் டைரக்சன் மற்றும் இசை…. இரண்டுமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகிறது…. பின்னணிப் பாடகர்களின் குரல் 1960களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது….

ராஜமாதாவாக மனோரமா, ராஜகுருவாக நாசர், கொல்லனாக மனோபாலா, மருத்துவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, கதாநாயகிகளாக தேஜாஸ்ரீ மற்றும் இன்னொரு பெண் (அழகியில் “ஒளியிலே தெரிவது தேவைதையா” பாடலில் வரும் அதே தேவதை) நீண்டநாள் கழித்து ஜோசியராக வி.எஸ். ராகவன், தளபதியாக ஸ்ரீமன் என்று எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்….

வடிவேலு குதிரை ஓட்டுகிறார், கத்திச்சண்டை போடுகிறார், காதல் காட்சிகளில் கலக்குகிறார்… ஹீரோக்களே உஷார்…. உங்களுக்கு போட்டி சக ஹீரோக்கள் அல்ல….

இந்தப் படத்தில் சொல்லவேண்டிய விஷயங்கள் ரொம்ப இருந்தாலும் கூட விமர்சனம் நீண்டுக்கொண்டே போவதால் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்….. இந்தப் படம் பார்ப்பது நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்….

இம்சை அரசன் – இடி முழக்கம்!


சூப்பர்மேன் ரிடர்ன்ஸ்

ஜூலை 5, 2006

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சூப்பர்மேன் திரும்பி வந்திருக்கிறார்… இதுவரை 4 பாகங்கள் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்து வெளிவந்தது…. 5வது பாகமான இந்தப் படம் புது சூப்பர் மேனான பிராண்டன் ரூத் நடித்து வெளிவந்திருக்கிறது…. பிராண்டன் ரூத் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் இளவயது தோற்றத்திலேயே அச்சு அசலாக இருக்கிறார்…. சுமார் ஆறரை அடி உயரம்… செம வெயிட் என்று அமர்க்களமான தோற்றம்….

படத்தின் கதையெல்லாம் சும்மா கப்சா தான்…. வேறு யாராவது ஹீரோ செய்தால் கடுப்பாகி விடுவோம்…. சாகசம் செய்வது சூப்பர்மேன் என்பதால் மன்னித்து விட்டு விடலாம்…. சூப்பர்மேன் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் விமானத்தை தன் சக்தி கொண்டு தூக்கி(?) காப்பாற்றுகிறார்…. அப்போதே ஆரம்பித்து விடுகிறது பூச்சுற்றல்….

இந்தப் படத்தில் மெலிதாக இழையோடும் காதல், பாசம் படத்துக்குப் பெரிய பலம்…. ஜூனியர் சூப்பர்மேன் அழகாக இருக்கிறான்…. சூப்பர்மேன் (முன்னாள்) காதலியும் சூப்பராகவே இருக்கிறார்…

கிரிப்டன் கிரகத்தில் பிறந்த சூப்பர் மேன் 4 வயதிலேயே தன் கிரகத்தை விட்டுப் பிரிந்து பூமியில் வாழவேண்டிய சூழ்நிலை…. பூமியில் இருக்கும் எந்த சக்தியாலும் சூப்பர்மேனை அழிக்க முடியாது…. கிரிப்டன் கிரகத்தின் கிரிஸ்டல் போன்ற ஒரு தாது கொண்டு மட்டுமே சூப்பர்மேனை அழிக்கமுடியும் என்று தெரிந்து கொண்ட வில்லன் அந்த தாதுவை கொண்டு மேலும் சில விசித்திர ஆய்வுகளைச் செய்து ஒரு புதிய கண்டத்தை உருவாக்க நினைக்கிறார்…. அந்தக் கண்டம் உருவானால் அமெரிக்கா முழுவதுமே அழிந்து விடும்….

அந்தக் கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும்போது சூப்பர்மேன் முட்டுக்கட்டையாக வருகிறார்…. இறுதியில் சூப்பர் மேனே அந்தக் கண்டத்தை தூக்கிக் கொண்டு போய் (அட்ரா…. அட்ரா….) விண்வெளியில் தூக்கிப் போட்டு விடுகிறார்…. அந்தக் கண்டம் கிரிப்டன் கிரகத்தின் தாது கொண்டு உருவாக்கப்பட்டதால் சூப்பர்மேன் உயிரிழக்கிறார்…

உயிரிழந்தாலும் முன்போலவே வந்து காதலியைச் சந்தித்துக் கொஞ்சுகிறார்…. மகனிடம் (ஆனா இவனுக்கு சூப்பர் மேன் இனிஷியல் இல்லே…. அதற்கு ஒரு இளிச்சவாயன் இருக்கிறார்) பாசம் காட்டுகிறார்…. சூப்பர்மேன் ஆச்சே… நம்பித்தான் தீரணும்…..

பின்னணி இசை மிரட்டுகிறது…. ஆனாலும் சூப்பர்மேனின் ட்ரேட் மார்க் இசை பழைய பாகங்களில் இருந்ததுபோல இல்லை…. ரொம்பவும் மைல்ட் ஆக இருக்கிறது….. படத்தின் டைட்டிலுக்கு போடப்படும் பின்னணி இசை நிஜமாகவே பயமுறுத்துகிறது…. படத்தில் மிஸ் செய்யக்கூடாத விஷயம் டைட்டில்…. மிகப் பிரம்மாண்டமான கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாத 3டி அனிமேஷன்….

பலகாட்சிகளில் எது கிராபிக்ஸ் சூப்பர்மேன்? எது ஒரிஜினல் சூப்பர்மேன் என்று கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியம்…. வில்லனாக வரும் மொட்டை சூப்பராக நடித்திருக்கிறார்…. அவரது செட்டப்பும் கலக்கி இருக்கிறார்…..

படம் முடித்து வெளியே வரும்போது எங்குமே பூக்கடைகளைக் காண முடியவில்லை…. காரணம் படம் பார்த்தவர்களின் காதுகளில் தியேட்டர்காரர்களே சொருகி அனுப்புவது தான்…. :-)

சூப்பர்மேன் – அசத்துகிறார்….


பாரிஜாதம்

ஜூலை 3, 2006

கத்தி இல்லை… இரத்தம் இல்லை… அவனைப் போட்டுர்றேன்… அவன் கையை வெட்டு, காலை வெட்டு…. ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்…… டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. இரைச்சல் இல்லை….. முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்…. ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்….

ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது…. சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா…. இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்…. தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்….. சொல்லுவதற்கு முன்பே உயிரை வேறு விட்டு விடுகிறார்….. உண்மை தெரிந்து கதாநாயகன் கதாநாயகியை கைபிடிப்பது என்ற ஒற்றை வரி கதை….. தன் ட்ரீட்மெண்டால் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார் பாக்யராஜ்….

குறிப்பாக ஹீரோயின் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களை தன் மகனாகவும், ஹீராயினாகவும் சீதா கற்பனை செய்து கொள்ள விஷுவல் ட்ரீட்மெண்ட் சூப்பர்…. ஹீரோயின் சரண்யாவைப் பொறுத்தவரை குத்துவிளக்கு மாதிரி இருக்கிறார்…. சினிமாவுக்கு ஏற்றத் தோற்றம் அவருக்கு இல்லை… ஹீரோ பிருத்வி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்….. இருக்காதா பின்னே? எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே?

இடைவேளைக்குப் பிறகே பாக்யராஜ் சம்பூர்ணம் என்ற கேரக்டராக உள்ளே நுழைகிறார் (விசு ஸ்டைல்?)…. பாக்யராஜ் தான் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறாராம்…. பிரகாஷ்ராஜுக்கு ஏற்ற வெயிட் கேரக்டர் இல்லை…. அவருக்கு நடிக்க ஸ்கோப் ரொம்பவும் கம்மியாக இருக்கிறது…. ஹீரோ அப்படியே 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும் பாக்யராஜை இமிடேட் செய்கிறார்….. படம் முழுவதும் இழைக்கப்பட்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை படத்துக்குப் பலம்…..

படத்தின் ஒரிஜினல் கதையை விட ஹீரோயின் (எழுத்தாளராம்) எழுதும் பாரிஜாதம் கதை சூப்பராக இருக்கிறது… அந்தக் கதையின் முடிவு ரொம்பவும் சோகம்….

ரொம்ப நாளுக்குப் பிறகு காதுக்கு இனிமையான பின்னணி இசை…. புதுமுக இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது…. ஒரு பாடல் ரொம்பவும் அருமை…..

பாரிஜாதம் – நன்றாகவே மணக்கிறது….


கொலைநகரம்

ஜூன் 10, 2006

தலைநகரம் படம் சமீபத்தில் பார்த்தேன்… ஏன் இந்த தலைப்போ தெரியவில்லை… பேசாமல் கொலைநகரம் என்று டைட்டில் வைத்திருக்கலாம்….

தமிழ் சினிமாவைப் பிடித்த சாபக்கேட்டின் படி இதுவும் தாதா கதை தான்… ரைட்டு என்ற பெயரில் ஒரு தாதா… திருந்தி வாழ நினைக்கும் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள்… முடிவு என்று ரொம்பவும் Typical ஆன Subject….

ரைட்டாக இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்… முகத்தில் சுத்தமாக Expression எதுவுமே காட்டாமல் தாதாவாக நடித்திருக்கிறார்… அவருக்கு நண்பனாக வரும் மெட்டி ஒலி போஸ் நன்றாக நடித்திருக்கிறார்…. ஆக்சன் காட்சிகளில் மட்டும் பட்டையைக் கிளப்புகிறார் சுந்தர் சி…. மார்கழி மாத பஜனைக் கூட்டத்தோடு வந்து இன்னொரு தாதாவின் வயிற்றில் ஒரு கோடு போட்டு விட்டுப் போகிறாரே…. செம அதிர்ச்சி தரும் காட்சி….

பிரகாஷ் ராஜ் ஏன் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஒத்துக் கொள்கிறாரோ தெரியவில்லை…. அவருக்கு தீம் மியூசிக் எல்லாம் கொடுக்கும்போது ஏதோ கலக்கப் போகிறார் என்று நினைத்து ஏமாற்றம் தான் அடைகிறோம்…

வடிவேலு வழக்கம்போல வெடிவேலு…. நாய்சேகராக இவரும் ஒரு குட்டித் தாதா (தாதா படங்களில் காமெடியனும் தாதா தானா?) இருந்தாலும் வின்னர், கிரி, லண்டன் என்று சுந்தர் சி இயக்கிய படங்களில் எல்லாம் கலக்கிய அளவுக்கு இந்தப் படத்தில் இல்லை…. பிகரை உஷார் செய்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு வரும் வடிவேலு மயில்சாமியிடம் கேட்கிறார்…. நான் எப்படி இருக்கென்?… அதற்கு மயில்சாமியின் பதில் “அண்ணே… சும்மா கும்முன்னு பிராத்தல் மாதிரி இருக்கீங்கண்ணே” :-)

படத்தில் பாய் ஆக வரும் கிழவர் சூப்பராக நடித்திருக்கிறார்… அவரது குரல்(!) அவருக்கு பிளஸ் பாயிண்ட்…. டெல்லி கணேசும் வழக்கம்போல அவரது கேரக்டரை (அரசியல்வாதி) மெருகேற்றி இருக்கிறார்…..

இசை சுமார் தான்… ஏதோ நினைக்கிறேன் பாட்டு மட்டும் ஓகே…. அந்தப் பாடலுக்கு இயக்குனர் அமைத்திருக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்…. இருந்தாலும் பாடலில் ஹீரோயின் சுறுசுறுப்பாக இருக்க ஹீரோவோ தேமேவென்று அசமஞ்சமாக இருப்பது கடுப்பு…..

கத்தி எடுத்தவன் நல்லவனாக இருந்தாலும் கத்தியால் தான் சாவான் என்று மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்…. 13 ரீலில் வெட்டு, குத்து என்று வன்முறையை நியாயப்படுத்தி விட்டு 14வது ரீலில் மெசேஜ் சொல்லுவது எவ்வளவு அபத்தம் என்று நம் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு என்றுதான் புரிந்து தொலைக்குமோ தெரியவில்லை…..

ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியிலாக படம் சுமார் தான் என்றாலும் தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கும் தாதா Fever, தலைநகரத்தை கரையேற்றுகிறது…..


புதுப்பேட்டை

ஜூன் 6, 2006

சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்… இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி…. இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்… இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது… மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்… சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்….

பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது… தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்…. அரசியல்வாதிகள் அல்ல…. ஓரிரு தாதாக்கள் மட்டுமே அரசியல் சார்பு நிலை எடுத்திருப்பதை பழைய தாதாக்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்….

உயிர் காக்க போராடும்போது ஒருவனின் வலிமை பன்மடங்காகிறது என்பது படம் சொல்லும் பாடம்…. கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவன் எப்படி நிதி அமைச்சர் (?) ரேஞ்சில் உயருகிறான்… அதற்காக அவன் என்னவெல்லாம் தரங்கெட்ட வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று காட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர்….

கதாநாயகன் நல்லவன் அல்ல…. கதாநாயகி ஒழுக்கமானவள் அல்ல…. படத்தில் எந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல குணமே கிடையாது… எல்லோருமே அயோக்கியர்கள், எல்லோருமே சுயநலவாதிகள்… இப்படியாக தமிழ் சினிமாவின் பல இலக்கணங்களை உடைத்திருக்கும் இயக்குநரின் தைரியத்துக்கு சபாஷ் போடலாம்….

எங்க ஏரியா உள்ளே வராதே என்ற பாடலுடன் அறிமுகமாகும் தனுஷ் (அந்தப் பாடலில் சிம்புவை ஏகத்துக்கும் போட்டுத் தாளிக்கிறார்) படத்துக்காக மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்…. இடைவேளை வரை அவரது பாத்திரத்துக்கு ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் அவரது உடலே இடைவேளைக்குப் பிறகு மைனஸ் பாயிண்டாக அமைகிறது….

பெற்ற அப்பாவையே நயவஞ்சகாக போட்டுத் தள்ளுவது… தன்னை உருவாக்கிய தலையின் தலையையே எடுத்து விடுவது… திருமணமாகப் போகும் நண்பணின் தங்கைக்கு விடாப்பிடியாக தாலி கட்டி அவள் வாழ்க்கையை நாசமாக்குவது இதெல்லாம் செய்பவர் தான் புதுப்பேட்டை ஹீரோ….

கதையை மையமாகக் கொள்ளாமல் களத்தை மையப்படுத்தி வெகுவேகமாக காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது…. இந்த அளவுக்கு வேகமான, சுவாரஸ்யமான காட்சிகளோடு ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம் தான்… இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்ற சகல துறைகளும் கச்சிதமாக இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது… குறிப்பாக பாலகுமாரனின் வசனம்….

ஹீரோவை எதிர்கோஷ்டி போட்டுத் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது… அந்தச் சூழ்நிலையில் வரும் பாடல் (கமல் பாடியது) மிக மிகப் பொருத்தமாக சொருகப் பட்டிருக்கிறது… கமலின் ஹைபிட்ச் வாய்ஸ் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் கிலி கொடுக்கிறது….

அதைப் போலவே பாடலே இல்லாமல் வெறும் இசையை மட்டுமே வைத்து ஹீரோ கேங்கில் சேர்ந்து வளரும் காட்சிகளை காட்டி இருப்பது அட்டகாசம்… பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கும் யுவன் ஏனோ பாடல்களில் கோட்டை விட்டு விட்டார்… மிக இனிமையான பாடல் ஆடியோ சிடியில் இடம் பெற்றிருந்தது… அது படத்தில் மிஸ்ஸிங்….

க்ளைமேக்ஸில் தன் குழந்தையைக் காப்பாற்ற தனுஷ் ஊரை விட்டே போக முடிவு செய்கிறார்…. வழக்கமான தமிழ் சினிமா க்ளைமேக்ஸை இயக்குநர் தேர்ந்தெடுத்து விட்டாரே என்று நினைக்கும்போதே… அடுத்த காட்சியில் தன் மகனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எதிரியைத் தாக்க புறப்படுகிறார் தனுஷ்…. வில்லன் வலியில்லாமல் சாக நினைத்து தன்னைத் தானே போட்டுக் கொள்வது கொடூரம்….

க்ளைமேக்ஸ் முடிந்தவுடன் வரும் Follow-up காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது… தவிர்த்திருக்கலாம்…

புதுப்பேட்டை…. இரத்தக் கோட்டை!!!


ஜெர்ரி – திரை விமர்சனம்

மே 29, 2006

கிரேஸி மோகன் இதுவரை 500 முறையாவது ஆள் மாறாட்டக் குழப்பத்தைக் கையாண்டு இருப்பார்…. 501வது முறையாகப் பார்க்கும் போதும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது….

முதலில் கை கொடுக்க வேண்டியது கிரேஸி மோகனுக்கு…. மிக மிக சாதாரணமான ஒரு மொக்கை கதையை தன் வசனங்கள் மூலம் சுவாரஸ்யம் ஆக்கி இருக்கிறார்…..

படத்தின் ஹீரோ கல்லூரியில் படிக்கிறார்…. சேலஞ்சுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காதவர்…. மூன்று பெண்களை காதலித்து காட்ட வேண்டும் என்ற சேலஞ்சில் வெல்கிறாரா அல்லது தோற்கிறாரா என்ற வெத்து கதை….

கிரேஸி மோகனின் வசனங்கள், எஸ்.பி. காந்தனின் (மவுலியின் தம்பி) இயக்கம் சுவாரஸ்யமாக இந்தக் கதையை முன்னெடுத்துச் செல்கிறது….

மெகா சீரியல் ஒன்றின் இரண்டு எபிசோடுகளுக்கு ஆகும் செலவிலேயே படம் முழுவதையும் முடித்திருக்கிறார்கள்…. இது போல படங்கள் எடுத்தால் ஓட வெண்டும் என்று கூட அவசியமில்லை…. ரீலீஸ் செய்தாலே தயாரிப்பாளருக்கு லாபம் தான்…..

ஹீரோவைப் பொறுத்தவரை ரொம்பவும் முரட்டுத் தனமாக அடியாள் மாதிரி இருக்கிறார்…. சாப்ட்டான கல்லூரி மாணவன் கேரக்டருக்கு அவர் செட் ஆகவில்லை…. அவருடன் வரும் நண்பர் அழகாக இருக்கிறார்…. அவரே ஹீரோவாக நடித்திருக்கலாம்…. பொதிகையில் ஆஹா பாடலாம் நிகழ்ச்சியை நடத்துகிறாரே அவர் தான்….

மூன்று ஹீரோயின்கள்…. ஒருவர் கல்லூரி மாணவி…. இன்னொருவர் போலிஸ் அதிகாரி…. மற்றொருவர் சினிமா நடிகை…. மூவருமே அழகுதான் என்றாலும் போலிஸ் அதிகாரியாக வரும் பிகருக்கு எக்ஸ்ட்ரா மார்க் கொடுக்கலாம்…. சினிமா நடிகையாக மும்தாஸ் (சொல்லவே தேவையில்லை)

இசை ரொம்ப சுமார்…. கடைசி பாட்டு மட்டும் செம ஜமாவாக இருக்கிறது…. நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு எனத் தொடங்கும் அந்தப் பாடலில் ஹீரோ மூன்று ஹீரோயின்களுடன் ஆடுவது செம அட்டகாசம்….

ஹீரோவுடன் படம் முழுவதும் வருகிறார் மாது பாலாஜி…. சலூன் கடை வைத்திருக்கும் அவர் ஒரு சொட்டைக்கு முடிவெட்ட வரும் போது எம்.சி.ஏ. படிச்சிட்டு இந்த வெலை செய்கிறேன் என்கிறார்…. கடைசியில் பார்த்தால் மாஸ்டர் ஆப் கட்டிங் ஆர்ட்சாம்…. வசனங்களில் செம கடி கடிக்கிறார் கிரேஸி….

அதுபோலவே ஹீரோ ஒரு இடத்தில் தன்னை Fire man என்று சொல்லும்போது கூட இருக்கும் மாது பாலாஜி நான் …………. என்று கூறி நிறுத்துகிறாரே…. தியேட்டர் அலறுகிறது…..

எந்த லாஜிக்கும் இல்லாமல் நகைச்சுவை சரவெடிகளை கொளுத்திப் போட்டு அட்டகாசம் செய்யும் படத்தில் தேவையில்லாமல் மெசேஜ் சொல்ல வேண்டுமே என்பதற்காக அனாதை குழந்தை, தத்தெடுப்பு என்றெல்லாம் சொதப்பி இருக்கிறார்கள்…. கிளைமேக்ஸ் கொஞ்சம் கூட வெயிட்டாக இல்லை…. அதுபோலவே ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வருவதற்கு வெயிட்டான காரணம் எதுவும் காட்டப்படவில்லை…

ஜெர்ரி – தரமான நகைச்சுவைக்கு உத்தரவாதம்!!!